புனித சியன்னா பெர்னார்தீன் (1380 - 1444)
சந்தியாகு
இத்தாலி நாட்டின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படும் புனித பெர்னார்தீன் இத்தாலி நாட்டிலுள்ள சியன்னாவில் 1380 இல் பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். நெருங்கிய உறவினர் ஒருவர் இவரை எடுத்து பக்தியிலும், ஒழுக்கத்திலும் வளர்த்து வந்தார்.
கல்வியிலும், புண்ணியத்திலும் விருத்தியடைந்த இவர் தனது 17வது வயதில் மாதா சபையில் சேர்ந்தார். இந்தச் சபை சியன்னாவில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனையில் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிபுரியும் சேவையில் ஈடுபட்டிருந்தது. தனது 20வது வயதில் நாட்டில் ஏற்பட்ட ஒரு கொடிய கொள்ளை நோயின்போது தனது வசதிகளைப் பொருட்படுத்தாமல் தன்னுடன் 12 இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு நோயுற்றோருக்கு உதவி செய்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு இருந்த உடமைகளை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டு பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். குருப்பட்டம் பெற்றபின் 12 ஆண்டுகளாகத் தனிமையாக செபத்தில் நாள்களைக் கழித்தார். பின்னர் பல இடங்களுக்கு கால்நடையாகவே சென்று, பல மணி நேரம் மறையுரை ஆற்றினார்.
சீர்திருத்தம் பெற்ற பிரான்சிஸ்கன் சபைக்குத் தலைவரானார். ஆனால், நாளடைவில் திருத்தந்தையின் அதிகாரம் பெற்று இப்பதவியிலிருந்து விலகினார். மீண்டும் ஊர் ஊராகச் சென்று மறையுரையாற்றத் தொடங்கினார். மனிதநேயம், கிறித்தவ ஒழுக்கக்கல்வி, பரிசுத்த குடும்பத்தின் விதிமுறைகள், அரசாங்கத்திலும், வியாபாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய நீதிமுறைகள், சமாதானம் இவற்றைப் பற்றி மணிக்கணக்கில் பிரசங்கித்து வந்தார். அனைவர் மீதும் இவரது பிரசங்கம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது உருக்கமான பிரசங்கத்தைக் கேட்க சில சமயங்களில் சுமார் முப்பதாயிரம் பேர் முதலாக வருவதுண்டு.
குருக்களைப் பற்றி எப்போதும் பொதுநிலையினர் கண்ணியமாகப் பேச வேண்டுமென்றும், அவர்களின் குறைகளை பொதுநிலையினர் பொது இடங்களில் பேசித் திரியக்கூடாது என்றும் அறிவுரை தந்துள்ளார். இயேசுவின் திருப்பெயரின் மகிமையைப் பற்றி இவர் எங்கும் பிரசங்கம் செடீநுதார். இயேசுவின் நாமத்திற்கு இவர் காட்டிய சிறப்புப் பக்தி விரைவில் மக்களிடம் பரவியது. இயேசுவின் திரு நாமத்தின் பிரார்த்தனை இவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அறிகிறோம். தனது 64வது வயதில் அதாவது கி.பி. 1444 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டார். மே மாதம் 20 ஆம் நாள் சந்நியாசிகள் இவரைச் சுற்றி நின்று "தந்தாய், உமது திருப்பெயரை நான் மக்களுக்கு அறிவித்தேன். உம்மிடம் மீண்டும் வருகின்றேன்" என்று பாடும் போது புனித பெர்னார்தின் உயிர் பிரிந்தது. உனது சகல செயல்களிலும் முதலில் கடவுளது அரசையும், அவரது மகிமையையும் தேடு. சகோதர அன்பில் நிலைத்திரு. பிறருக்கு நீ போதிக்க விரும்புவதை முதலில் பயிற்சி செய் என்று புனித பெர்னார்தீன் கூறியுள்ளார்.


